நாமக்கல் நகரில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும், பரமத்திவேலூரில் இருந்து 17 கி.மீ. தொலைவிலும், தொட்டியம் காட்டுப்புத்தூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது மோகனூர். இங்கே, ஊருக்குள், காவிரிக் கரையோரத்தில் உள்ளது ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம்!

இந்தத் தலத்தின் சரிதம் சுவாரஸ்யமானது.

தயிர் விற்கும் குமராயியைத் தெரியாதவர்களே அந்த ஊரில் இல்லை. சிறியவர்கூட அவளை குமராயி என்றே அழைத்தனர். இரண்டு பானைகளில் தயிரை நிரப்பி, தலையில் வைத்தபடி, வீதி வீதியாகச் செல்வாள். தயிரை விற்று முடித்து, காவிரிக் கரைக்கு வருவாள்.  பானையில் ஒட்டிக் கொண்டிருக்கும் தயிரை அப்படியே வழித்தெடுத்து, அருகில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வாள்! சிவபெருமானின் மீது அளவற்ற பக்தி அவளுக்கு!

ஒருநாள்… இதேபோல் தயிரை வழித்து அபிஷேகம் செய்து சிவனாரை வணங்கித் திரும்பிய போது, தயிர் அபிஷேகத்தில் குளிர்ந்து போன இறைவன், ‘இந்தா தயிருக்கு காசு’ என்று சொல்லி கொடுக்க… நெகிழ்ந்து போனாள் குமராயி! கெட்டியாக, சத்து மிகுந்த, தரமான தயிரைக் கொடுத்ததால், வியாபாரம் சிறப்புற நடந்தது. வாழ்க்கையும் செம்மையாயிற்று. தயிர் விற்ற காசை சிறுகச் சிறுகச் சேர்த்து, சிவனாருக்கும் கூடவே அம்பாளுக்கும் ஆலயம் எழுப்பி விரிவாக்கினாள்.

மனதுள் சிவபக்தியையும் தலையில் தயிர்ப் பானையையும் சுமந்து வந்த குமராயி, ஒருநாள்… கருவுற்றாள். ஊரே திகைத்தது. கூடியது. இவளை வசைபாடியது. பின்னே… திருமணமாகாதவள் கர்ப்பம் எனில்..?! ‘யார் காரணம்?’ என கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். கூட்டத்தை ஏறிட்டவள், தைரியமாக, நிதானமாக சொன்னாள் ‘’இது, இறைவன் என் பக்திக்குத் தந்த பரிசு!’

ஊர்மக்கள் கைகொட்டிச் சிரித்தனர். ‘கடவுளாவது… பரிசாவது…’ என கேலி பேசினர். இதில் ஆத்திரமுற்ற குமராயி, விறுவிறுவென காவிரிக் கரைக்குச் சென்றவள், அங்கே… அவள் கட்டிய கோயிலுக்குள் நுழைந்தாள். மொத்தக் கூட்டமும் பின்தொடர்ந்தது. எதுவும் புரியாமல் ஒருவருக்கொருவர் பார்க்க,  அம்பாளின் சந்நிதிக்குச் சென்றவள், திரும்பிப் பார்த்தாள்; ‘நான் போயிட்டு வரேன்’ என்று சொல்லிவிட்டு, சந்நிதிக்குள் நுழைந்தாள். அம்பாளுடன் இரண்டறக் கலந்தாள். மறைந்தாள்! இதனால் சிவனாருக்கு குமரீஸ்வரர் என்றும் அம்பிகைக்கு குமராம்பிகை என்றும் திருநாமங்கள் அமைந்தது.  ஆம்… இங்கே குடிகொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம் – ஸ்ரீஅசலதீபேஸ்வரர்; அம்பிகை – ஸ்ரீமதுகரவேணி அம்பாள்!

அதென்ன அசலதீபேஸ்வரர்? சலனம் என்றால் அசைவது. அசலனம் என்றால் அசையாமல் இருப்பது. இங்கே… கருவறையில் உள்ள தீபம் ஒன்று, அசையாமல் எரிந்தபடி ஒளி வீசிக் கொண்டிருக்கிறது (குமராயி ஏற்றிய திருவிளக்கு என்பாரும் உண்டு). இதனால், ஸ்வாமிக்கு ஸ்ரீஅசலதீபேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானதாம். மிகுந்த வரப்பிரசாதி இவர்!

காசியில் ஸ்ரீவிஸ்வநாதர் சந்நிதியில் இறைவனை தரிசித்து விட்டு அப்படியே திரும்பினால், புண்ணிய கங்கை நதியை தரிசிக்கலாம். இதே போல், அசலதீபேஸ்வரரை தரிசித்து விட்டு, சந்நிதியில் இருந்தபடியே காவிரி நதியை வணங்கலாம்! இதுபோல் வழிபட… முன்வினை யாவும் நீங்கி, நிம்மதியும் அமைதியும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்!

பீஜாவாப மகரிஷி, நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் முதலான மகான்கள் பலரும் வழிபட்ட தலம்… மோகனூர் ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம் (ஆலயத்துக்கு எதிர்க் கரையில் சதாசிவ பிரம்மேந்திராளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது).

பீஜாவாப மகரிஷி என்பவர், இங்கே… காவிரிக் கரையில் கடும் தவம் செய்து சிவலிங்கத்தை பூஜை செய்து வந்தாராம்! பரணி தீபத் திருநாளில், இங்கே சிவனாருக்கு தீபம் ஏற்றி வழிபட்டதும், அப்படியே வானில் பறந்தபடி திருவண்ணாமலைக்குச் சென்று அண்ணாமலையாருக்கும் தீபம் ஏற்றி வழிபட்டு வணங்கியதும் மோகனூருக்கு திரும்புவாராம்! எனவே, இன்றைக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது.

அம்பாள் ஸ்ரீமதுகரவேணி அம்பாள் குறித்த கதையை விவரித்தார் அர்ச்சகர்.

மாம்பழப் பிரச்னையில் முருகப் பெருமான் கோபமாகி, கிளம்பினார் அல்லவா? இதில் பதறித் துடித்த பார்வதிதேவி, மைந்தனை தடுத்து நிறுத்த… பின்னாலேயே வந்தார். ஒரு கட்டத்தில் உணர்ச்சி மேலிட, ‘மகனே நில்!’ என்று அன்னையார் சொல்ல… நின்று திரும்பிப் பார்த்தார் முருகன். இதில், பெற்ற மனம் குளிர்ந்தது. உணர்ச்சி மேலிட மார்பகத்தில் இருந்து தாய்ப்பால் பெருகி வழிந்தது. காவிரியில் கலந்தது! ஆகவே இங்கே பக்தர்களுக்கு, பிள்ளை வரம் தந்து அருளுகிறாள் ஸ்ரீமதுகரவேணி அம்பாள்! ‘மகனே நில்…’ என்று சொல்ல, ஸ்ரீமுருகன் நின்றதால், இந்த ஊர் மகனூர் எனப்பட்டு, பின்னர் மோகனூர் என்றானதாம்!

சாந்நித்தியம் நிறைந்த கோயில். இங்கே… பீஜாவாப மகரிஷியின் சிற்பமும் உண்டு; ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராளின் திருப் பாதங்களை பிரதிஷ்டை செய்த சந்நிதியும் உள்ளது.

 

To read about other South Indian temple please click https://goo.gl/8DNzJU

Categories: General

Related Posts

General

Phulera Dooj, 28 February 

  Phulera Dooj is a wonderful celebration of the colourful season we are in – spring time. Phulera means ‘’of flowers’’. Falling between Vasant Panchami and Holi, this festival is mostly celebrated in the North Read more…

General

फुलेरा दूज – 28 फ़रवरी – मंगलवार

  वसंत ऋतु के उल्लासपूर्ण वातावरण का एक आनंदमयी उत्सव है ‘फुलेरा दूज’। यह त्यौहार वसंत पंचमी और होली के बीच फाल्गुन मास के शुक्ल पक्ष की द्वितीया तिथि को मनाया जाता है। इसे फाल्गुन Read more…

General

శ్రీ కన్యకాపరమేశ్వరి ఆలయం, బెల్లంపల్లి

  శ్రీ వాసవీ కన్యకా పరమేశ్వరి వైశ్యుల కులదేవత.  వాసవీ పురాణంలో వైశ్యులలో కళింగ వైశ్యులు, త్రివర్ణిక వైశ్యులనే రెండు వర్గాలు ఉన్నట్లు పేర్కొనబడినది. ఈ దేవతకు ప్రధాన క్షేత్రం పశ్చిమ గోదావరి జిల్లా పెనుగొండ. వాసవీ కన్యకా పరమేశ్వరి ఆత్మార్పణ చేసుకొనే సమయంలో భక్తుల కోరిక మేరకు Read more…